மோதல் எதிரொலி: அமைதி வாரியத்திலிருந்து கனடாவை நீக்கினார் டிரம்ப்
- காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
- இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வாஷிங்டன்:
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளன.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்தது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை. டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை டிரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.