பழிவாங்கியே தீருவோம்.. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது - மத்திய கிழக்கு மீது தாக்குதல் தொடரும் - ஈரான் உச்ச தலைவர் | Mojtaba
- உயிர் இழந்த ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பழிவாங்குவோம்.
- நான் எனது தந்தையின் பாதையிலேயே தொடர்வேன்.
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தாபா கமேனி பதவியேற்ற பிறகு தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மொஜ்தாபா கமேனியின் இந்த அறிக்கை ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் மூலம் வாசிக்கப்பட்டது.
அதில், "அமெரிக்காவிற்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்க ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும்.
அமெரிக்க ராணுவத் தளங்கள் இப்பகுதியில் தொடர்ந்து செயல்பட்டால் அவை தாக்கப்படும். அந்தத் தளங்களை அவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூட வேண்டும்.
ஏனெனில், அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டப்போவதாக அமெரிக்கா கூறியது ஒரு பொய் என்பதை அவர்கள் இந்நேரம் உணர்ந்திருப்பார்கள்.
ஈரான் ஒருபோதும் பின்வாங்காது. முழு பலத்துடன் எதிர்க்கும். மறைந்த எனது தந்தை அயதுல்லா அலி காமேனிக்கு மட்டுமல்லாது, போரில் உயிர் இழந்த ஒவ்வொரு குடிமகனுக்காகவும் பழிவாங்குவோம்.
எதிரியிடமிருந்து ஈரான் இழப்பீடு பெறும். அவர்கள் மறுத்தால், அவர்களின் சொத்துக்களை ஈரான் பறிமுதல் செய்யும் அல்லது அதே அளவிற்கு அவற்றை அழிக்கும்.
பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதுவரை வடிவம் பெற்றுள்ளது. ஆனால் அது முழுமையாக நிறைவேறும் வரை, இதுவே எங்களது முன்னுரிமை.
எனது தந்தை எப்போதும் உண்மையையே பேசினார் என்பதை அவரது மரணம் காட்டியுள்ளது. நான் எனது தந்தையின் பாதையிலேயே தொடர்வேன். தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்கியே தீருவோம்" என்று சூளுரைத்தார்.