உலகம்

பாகிஸ்தானில் 35 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Published On 2025-09-14 04:55 IST   |   Update On 2025-09-14 04:55:00 IST
  • பாகிஸ்தானில் தனித்தனியாக நடந்த தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
  • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது பஜவுர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

அதேபோல், தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை கைப்பற்றப்பட்டன.

இந்த இரு தாக்குதலிலும் கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.

Tags:    

Similar News