உலகம்

ஹாங்காங் விவகாரங்களில் தலையிடக் கூடாது: வெளிநாடுகளுக்கு சீனா எச்சரிக்கை

Published On 2026-02-12 04:55 IST   |   Update On 2026-02-12 04:55:00 IST
  • ஹாங்காங்கைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகை அதிபர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
  • அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

பீஜிங்:

பிரிட்டன் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, 'ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை' என்ற கொள்கையின்கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா ஒப்புக் கொண்டது.

அதன்படி, சீனாவில் வசிக்கும் மக்களுக்கு இல்லாத உரிமைகள் ஹாங்காங்வாசிகளுக்குக் கிடைக்கும் என கூறப்பட்டது. எனினும், ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் நடைபெற்ற போராட்டத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது.

சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீன நாடாளுமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி, ஏராளமான ஜனநாயக ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, ஜனநாயகத்துக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த ஹாங்காங்கின் 'ஆப்பிள் டெய்லி' நாளிதழ் நிறுவனரான ஜிம் லாய் மீது பிராந்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தது. அரசின் நெருக்கடி காரணமாக அந்த நாளிதழ் நிறுத்தப்பட்டது.

ஜிம்மி லாய் வெளிநாட்டு சக்திகளுடன் சதிசெய்து தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார். சீன அரசை வீழ்த்த அமெரிக்காவுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்தார் என தெரிவிக்கப்பட்டு, அவர் கடந்தாண்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

2020 ஆகஸ்ட் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

ஜிம்மி லாய்க்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் கண்டனங்களைத் தெரிவித்தன.

இந்நிலையில், ஹாங்காங்கின் இறையாண்மை மற்றும் சட்ட விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News