உலகம்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலி: ஆப்கானிஸ்தான் எல்லை அருகே முகாம்களை அமைக்கும் பயங்கரவாத குழுக்கள்

Published On 2025-09-20 15:42 IST   |   Update On 2025-09-20 15:42:00 IST
  • லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
  • பாகிஸ்தானில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்திய போர் விமானங்கள் ஊடுருவி தாக்கியது.

பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் பல இடங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா உள்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலில் தங்களது முகாம்கள் அழிக்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.

இந்தநிலையில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை எதிரொலியால் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தங்களது முகாம்களை வேறு இடத்துக்கு மாற்ற தொடங்கி உள்ளன. இதை இந்திய ராணுவ வட்டாரங்கள் கண்டறிந்து உள்ளது.

பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அமைக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியதாக பயங்கரவாதிகள் கருதுகிறார்கள்.

இதையடுத்து இந்திய எல்லையில் இருந்து அதிக தூரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News