மலேசியாவுக்கான இந்திய எம்.பி.க்கள் குழு பயணத்தை தடுக்கும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி
- குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடந்தன.
- பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்தது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது.
இந்த நடவடிக்கை தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பியது. இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினர்.
இதில் ஜே.டி.யு. கட்சி எம்.பி. சஞ்சய் ஜா தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பருவா, ஹேமங் ஜோஷி, திரிணாமுல் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜான் பிரிட்டாஸ், காங்கிரசின் சல்மான் குர்ஷித், முன்னாள் தூதர் மோகன்குமார் ஆகியோர் அடங்கிய குழு மலேசியாவுக்கு சென்றது.
இந்த நிலையில் இந்திய எம்.பி.க்கள் குழுவின் மலேசிய பயணத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இந்திய பிரதிநிதிகளின் அனைத்து பயண திட்டங்களையும் ரத்து செய்யுமாறு மலேசியாவை பாகிஸ்தான் வலியுறுத்தியது.
இதுதொடர்பாக மலேசிய அரசாங்க அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தூதரகம், நாங்கள் ஒரு இஸ்லாமிய நாடு, நீங்கள் ஒரு இஸ்லாமிய நாடு. இந்திய பிரதிநிதிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். மலேசியாவில் அவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுங்கள் என்று தெரிவித்தது.
மேலும் காஷ்மீர் விவகாரத்தையும் மேற்கோள் காட்டி தனது கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா திட்டவட்டமாக மறுத்து விட்டது.
மேலும் இந்திய குழுவுக்கு மலேசியா முழு ஆதரவு அளித்தது. அக்குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடந்தன. மலேசிய பாராளுமன்றத் தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஒய்.பி. டான் ஸ்ரீ டத்தோஜோஹாரி பின் அப்துல்லை இந்திய எம்.பி.க்கள் குழு சந்தித்து பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கியது. மேலும் மலேசிய எம்.பி.க்களையும் சந்தித்து பேசியது. பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்தது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.