அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு!
- இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது
- பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன
ஈரானை குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய குடியரசில் இதுவரை குறைந்தது 555 பேர் கொல்லப்பட்டதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி தெரிவித்துள்ளது. மேலும் போரில் இதுவரை 131 நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஈரான்மீது சனிக்கிழமை அமெரிக்கா - இஸ்ரேல் தொடங்கிய கூட்டுத்தாக்குதல் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து வருகிறது. சனிக்கிழமை ஈரான் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக தொடர் தாக்குதலில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. அதன் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களிலும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இச்சூழலில் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்றவை அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும் ஈரான் தனது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இதனிடையே இஸ்ரேல் லெபனான்மீதும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது. ஹெஸ்பொல்லா தலைவர் நைம் காசெம் இப்போது 'அழிக்கப்பட வேண்டியவர்' என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது. மத்திய கிழக்கில் போர்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தாக்குதல்களும் தொடர்ந்துவருகின்றன.