ஈரானுக்கு எதிராக களம் இறங்க தயார் - பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் கூட்டறிக்கை
- ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார்.
- தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த கூட்டறிக்கையில், "எங்கள் நெருங்கிய கூட்டாளிகளை குறிவைத்து ஈரான் நடத்தும் பொறுப்பற்ற தாக்குதல்கள் பிராந்தியம் முழுவதும் உள்ள எங்கள் பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. இந்த பொறுப்பற்ற தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஈரானை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் நலன்களையும், பிராந்தியத்தில் உள்ள எங்கள் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாக்க ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிக்க தற்காப்புத் தாக்குதல்களை நடத்த தயார்" என அந்நாடுகள் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈரானிய ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தற்காப்பு நோக்கத்திற்காக" பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு இங்கிலாந்து அனுமதிக்கும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்தார்.