உலகம்

ஈரான் இலக்குகளை குறிவைத்து 1,200 குண்டுகள் மூலம் தாக்குதல்: இஸ்ரேல் ராணுவம்

Published On 2026-03-01 18:24 IST   |   Update On 2026-03-01 18:24:00 IST
  • சனிக்கிழமை இரவு மட்டும் 200 விமானங்கள் மூலம் 500 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
  • ஈரானின் 900 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டவில்லை.

இந்த நிலையில்தான் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்ச தலைவர் அபயதுல்லா காமேனி மற்றும் இரண்டு அமைச்சர்கள் கொல்லப்பட்டனர். மேலும், பல இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஈரானின் பல்வேறு இலக்குகளை குறிவைத்து 1200 குண்டுகள் வீசப்பட்டன என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு மட்டும் 200 விமானங்கள் மூலம் 500 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

முதலாவதாக இஸ்ரேலை ஒட்டியுள்ள தெஹ்ரான் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயார் படுத்தி வைத்திருந்த பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

தப்ரிஸ் என்ற பகுதியில் இருந்துதான் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப்படை இஸ்ரேல் நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியது. இதனால் இந்த இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஈரானின் 900 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா இன்று காலை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News