உலகம்

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவின் ரஃபா எல்லைக் கடவையை மூடிய இஸ்ரேல்!

Published On 2026-03-01 16:38 IST   |   Update On 2026-03-01 16:38:00 IST
  • இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத காஸாவின் ஒரே எல்லை
  • பிப்ரவரியில் தற்காலிகமாக திறக்கப்பட்டது

ஈரான் மீது அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுத் தாக்குதல்களை தொடர்ந்துவரும் நிலையில், எகிப்துடனான காசாவின் ரஃபா எல்லைக் கடவையை இஸ்ரேல் மூடியுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'காசா பகுதிக்குள் நுழையும் ரஃபா எல்லை உள்ளிட்ட அனைத்து கடவைகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவது உட்பட, பல அவசியமான பாதுகாப்பு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா முனையின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள ரஃபா எல்லைக் கடப்பு, கடந்த மாதம் தான் மீண்டும் திறக்கப்பட்டது. இதன் மூலம் பல மாதங்களில் முதல்முறையாக, அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

பிப்ரவரியில் ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காசா பகுதிக்குள் மருந்துகள், புனரமைப்புப் பொருட்கள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தது. இந்நிலையில் மீண்டும் இந்த எல்லை மூடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பான COGAT மேலும் கூறியதாவது:

"போர்நிறுத்தம் ஆரம்பித்தது முதல் உள்ளே சென்றுள்ள உணவின் அளவு, மக்களின் ஊட்டச்சத்து தேவையை விட நான்கு மடங்கு அதிகம். எனவே, தற்போது கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் நீண்ட காலத்திற்குப் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது." என தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தத் தகவலை உறுதிப்படுத்த எந்தவொரு ஆதாரத்தையும் அந்த அமைப்பு வழங்கவில்லை.

எல்லைக் கடப்புகள் மூடப்படுவது, காசா பகுதியின் மனிதநேயச் சூழலில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது. அத்துடன், சர்வதேச சமூகத்துடன் தொடர்பில் இருப்போம் என்றும், இது குறித்த மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்கள் குறித்து அவ்வப்போது தகவல்களை வழங்குவோம் என்றும் அது தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News