உலகம்

நரகத்தின் வாயில்களை திறக்கிறோம்.. மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ஈரான்

Published On 2026-03-01 13:07 IST   |   Update On 2026-03-01 13:12:00 IST
  • காமேனி, அவரின் மகள், பேரன்,மருமகள், மருமகன் உயிரிழந்தனர்.
  • அமெரிக்கா-இஸ்ரேல் சிவப்பு கோட்டை மீறிவிட்டது.

உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மரணத்திற்குப் பிறகு பழிவாங்கும் தாக்குதல்களை ஈரான் தொடங்கியுள்ளது.

அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, நேற்று அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஆபரேஷன் லயன்ஸ் ரோர் என்ற பெயரில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதில் ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தாக்குதல்கள் நிகழ்ந்தன.

இதில் தெஹ்ரானில் உச்ச தலைவர் அயதுல்லா காமேனியின் வீடு மற்றும் அலுவலகம் அமைந்த வளாகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காமேனி, அவரின் மகள், பேரன்,மருமகள், மருமகன் உயிரிழந்தனர்.

இதற்கிடையே நேற்று முதல் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் காமேனியின் மரணத்திற்கு பிறகு மேலும் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் ஆகியவற்றின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

குவைத்தின் அப்துல்லா முபாரக் பகுதியில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 டிரோன்களால் தாக்கப்பட்டது. 

இதில் அங்குள்ள உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும், ஏராளமான அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

துபாயின் ஜெபல் அலி கடல் பகுதியில் அமெரிக்கக் கப்பல்களுக்கு வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், 4 ஈரானிய டிரோன்களால் தாக்கப்பட்டது.

மேலும், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற போர்க்கப்பல், ஈரான் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது.

கத்தாரின் தலைநகர் தோஹாவிலும் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

137 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 209 டிரோன்கள் மூலம் தங்கள் நாட்டை ஈரான் தாக்கியதாக ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அவற்றில் 132 ஏவுகணைகள் வானில் அழிக்கப்பட்டதாகவும், 195 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மீதமுள்ளவை கடலிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விழுந்தன என்று தெரிவித்துள்ளது. 

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் டெலிகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் இமாமின் (காமேனி) கொலைகாரர்களைப் பழிவாங்குவோம்.

ஈரானிய தேசத்தின் கரம் அவர்களை விடாது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். எதிரிப் படைகளுக்காக நரகத்தின் வாயில்களை நாங்கள் திறந்து வைப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ், இந்த மோதல்கள்கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். உடனடியாகப் போரை நிறுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இரு தரப்பினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், போரைத் தவிர்க்கவும் ரஷியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில்,"ஈரான் இன்று முன்பை விட கடுமையாகத் தாக்கும் என்று கூறுகிறது. அவர்கள் அதைச் செய்யாமல் இருப்பது நல்லது.

அவர்கள் துணிந்தால், உலகம் இதற்கு முன் பார்த்திராத வகையில் அவர்கள் மீது பலத்தைப் பயன்படுத்துவோம்" என்று எச்சரித்துள்ளார்.  

Tags:    

Similar News