ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அலிரேசா அராஃபி நியமனம்!
- ஈரானின் உயரிய மதப் பட்டமான 'அயதுல்லா' அந்தஸ்தைப் பெற்றவர்.
- நிபுணர்கள் அவை புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, இடைக்காலக் குழு நாட்டை நிர்வகிக்கும்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அரசுப் பணிகளைக் கவனிப்பதற்காக மூன்று பேர் கொண்ட இடைக்காலக் குழு அமைக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக அயத்துல்லா அலிரேசா அராஃபியை நியமித்துள்ளது.
நாட்டின் உச்சத் தலைவரை தேர்ந்தெடுக்கும் கடமையை கொண்ட பாதுகாவலர் குழுவின் உறுப்பினர் அயதுல்லா அலிரேசா அராஃபி, அதிபர் மசூத் பெசெஷ்கியன் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேய் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஈரானிய அரசியலமைப்புச் சட்டத்தின் 111-வது பிரிவின்படி,'நிபுணர்கள் அவை' (Assembly of Experts) என்று அழைக்கப்படும் 88 உறுப்பினர்களைக் கொண்ட குழு, புதிய உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, இந்த இடைக்காலக் குழு நாட்டை நிர்வகிக்கும்.
அலிரேசா அராஃபி ஈரானின் சக்திவாய்ந்த பாதுகாவலர் சபையின் (Guardian Council) உறுப்பினர், ஈரானிய மதக் கல்விக்கூடங்களின் (Islamic Seminaries) தலைவர் மற்றும் நிபுணர்கள் பேரவையின் (Assembly of Experts) மூத்த உறுப்பினர் எனப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றார். 1959 ஆம் ஆண்டு ஈரானின் மெய்போட் நகரில் பிறந்த இவர், ஈரானின் உயரிய மதப் பட்டமான 'அயதுல்லா' அந்தஸ்தைப் பெற்றவர்.
காமேனியின் நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய உதவியாளராகக் கருதப்படும் இவர், ஈரானின் தற்போதைய அரசியல் நெருக்கடி மற்றும் போர்ச் சூழலைக் கையாளும் முக்கிய அதிகார மையமாகத் திகழ்கிறார்.
நேற்று அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது மருமகள், மருமகன், பேரன் என குடும்பத்தினர் பலரும் கொல்லப்பட்டனர். இதற்கு ஈரான் கடும் பதிலடி கொடுக்கும் என அமெரிக்காவையும், இஸ்ரேலையும் எச்சரித்துள்ளது.