இந்திய எம்.பி.க்கள் குழு அதிருப்தி: பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை திரும்ப பெற்றது கொலம்பியா
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
- காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.
காஷ்மீரின் பஹல்காமில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதனால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சித்தது. அதை இந்தியா ராணுவம் முறியடித்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு மற்றும் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் பற்றி விளக்க வெளிநாடுகளுக்கு எம்.பிக்கள் கொண்ட 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பி உள்ளது.
அவர்கள் ஒவ்வொரு நாடாக சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள். காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியா நாட்டுக்கு சென்றனர்.
அப்போது தலைநகர் பொக்கோட்டாவில் சசி தரூர் நிருபர்களிடம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த இரங்கல் என்பது பயங்கரவாதிகளை அனுப்புபவர்களுக்கும், பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளுபவர்களுக்கும் இடையே வேறுபாடு இன்றி உள்ளது என்றார்.
இதற்கிடையே கொலம்பியா எம்.பிக்களை, சசிதரூர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை விளக்கினர்.
இந்த நிலையில் இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையை கொலம்பியா திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக சசிதரூர் கூறும்போது, நாங்கள் கவலை தெரிவித்ததையடுத்து பாகிஸ்தான் ஆதரவு அறிக்கையை கொலம்பியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை முழுமையாகப் புரிந்துகொள்கிறோம் என்று கொலம்பியா துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா தெரிவித்தார்.
இது நாங்கள் மிகவும் மதிக்கும் ஒன்று. எங்கள் இறையாண்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், இந்திய துணைக் கண்டத்தில் அமைதிக்காகவும் எங்களுடன் கொலம்பியா உறுதியாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கையை கொலம்பியா வெளியிடும்" என்று தெரிவித்தார்.