உலகம்

எதிர்த்து நின்ற சீனா.. 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா - வலுக்கும் வர்த்தக போர்

Published On 2025-04-16 14:50 IST   |   Update On 2025-04-16 14:50:00 IST
  • 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது.
  • சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனா இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான 'உலகின் அரிய மண் தாது'க்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்பத்திக்கு அமெரிக்கா சீனாவையே அதிகம் சார்ந்துள்ளது.

இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள், மின்னணுவியல், வாகன உற்பத்தியாளர்கள், எரோஸ்பேஸ் உற்பத்தியாளர்கள், செமிகண்டக்டர் நிறுவனங்கள், மற்றும் பிற நுகர்வோர் பயன்பாட்டுக்கான பொருட்களை தயாரிக்க தேவையான மூலக் கூறுகள் முற்றிலும் தடைப்படும் அபாயம் உருவாகி உள்ளது. 

மேலும் அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க தங்கள் நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. மேலும் விமானம் தொடர்பான எந்த கருவிகளையும் அமெரிக்காவிடமிருந்து வாங்க வேண்டாம் எனவும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சீன இறக்குமதிக்கான வரியை ஏற்கனவே விதித்த 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அரசுக் குறிப்பில், "சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளின் விளைவாக அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இப்போது 245% வரை வரி விதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக "சீனா சண்டையிட விரும்பவில்லை, ஆனால் சண்டையிட பயப்படவில்லை" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News