null
அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது
- ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார்.
- கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார்.
அதன்படி அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் இந்திய பொருட்கள் மீது டிரம்ப், முதலில் 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந் தேதி அமலுக்கு வந்தது.
அத்துடன், ரஷியாவிடம் கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. எனவே, இந்திய பொருட்கள் மீதான வரிவிதிப்பு இன்று முதல் 50 சதவீதமாக உயருகிறது.
இதையொட்டி, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை ஒரு வரைவு ஆணை வெளியிட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆகஸ்டு 27-ந் தேதி (அதாவது இன்று) அதிகாலையில் இருந்து விற்பனைக்காக அமெரிக்காவில் நுழையும் மற்றும் அமெரிக்காவில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து விற்பனைக்காக வெளியேறும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு பொருந்தும்.
அதே சமயத்தில், 27-ந் தேதி அதிகாலைக்கு முன்பு கப்பலில் ஏற்றப்பட்ட இந்திய பொருட்கள், நடுவழியில் கப்பலில் வந்து கொண்டிருக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்கு 25 சதவீத கூடுதல் வரி பொருந்தாது. இருப்பினும், செப்டம்பர் 17-ந் தேதிக்கு முன்பு அமெரிக்காவில் பயன்படுத்த அவற்றுக்கு ஒப்புதல் பெறுவதுடன், அமெரிக்க சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரிவிதிப்பால், ஜவுளி, ஆயத்த ஆடைகள், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், இறால், தோல், காலணி, விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திர சாதனங்கள் ஆகிய துறைகள் பாதிக்கப்படும்.
ஆனால் மருந்து பொருட்கள், எரிசக்தி பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் ஆகியவற்றுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
கடந்த ஆண்டு வர்த்தக மதிப்புப்படி, அமெரிக்காவுக்கு 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. எனவே, அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், 4 ஆயிரத்து 820 கோடி டாலர் மதிப்புள்ள இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை தவிர, பிரேசில் மட்டுமே 50 சதவீத வரியை சந்திக்கிறது. சீனா 30 சதவீத வரியையும், மியான்மர் 40 சதவீத வரியையும் சந்தித்து வருகின்றன.
இந்திய பொருட்களுக்கு வரி உயர்வு அமலுக்கு வரும் வேளையில், சீனாவுக்கும் 200 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அதாவது கடந்த ஏப்ரல் மாதம், சீன பொருட்கள் மீதான வரியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தாறுமாறாக உயர்த்தினார். ஒருகட்டத்தில் 150 சதவீத வரி அளவுக்கு உயர்த்தினார். அதேபோல் சீனாவும் பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீதான வரியை அதே அளவுக்கு உயர்த்தியது.
இருதரப்பிலும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவானது. இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
சீனாவின் அரியவகை புவி காந்தங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும், அமெரிக்க தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை வாபஸ் பெறவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 55 சதவீதமாக சீனா குறைத்தது. சீன பொருட்கள் மீதான வரியை 32 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தம், நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இந்த தற்காலிக வர்த்தக போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில், சீனாவுக்கு இந்த பகிரங்க மிரட்டலை தற்போது டிரம்ப் விடுத்துள்ளார்.