செய்திகள்

ரோஹிங்கியா அகதிகளை இந்தியா மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐநா அதிருப்தி

Published On 2018-10-05 13:52 GMT   |   Update On 2018-10-05 13:52 GMT
ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்தியதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. #UN #Rohingya
ஜெனீவா:

இந்தியாவில் சட்டவிரோதமாக சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க மாநில அரசுக்களிடம் கேட்டுகொண்டிருந்தது. சமீபத்தில், முதல் கட்டமாக 7 பேர் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டனர்.

மணிப்பூரில் உள்ள மொரே எல்லையில், மியான்மர் நாட்டு அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் 7 பேரையும் ஒப்படைத்தனர். இந்தியா வந்த ரோஹிங்யாக்கள் நாடு கடத்தப்படுவது, இதுவே முதல் முறையாகும். முன்னதாக, தாங்கள் மியான்மருக்கு சென்றால் இனப்படுகொலைக்கு ஆளாவோம் என்பதால் தங்களை நாடு கடத்தக்கூடாது என 7 பேர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டது.
இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு அசாமில் சட்ட விரோதமாக குடியேறினர். இவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்து சிலிசார் சிறையில் அடைத்து இருந்தனர். இவர்களை நாடு கடத்த உள்ளூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்தியா 7 ரோஹிங்யாக்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக ராணுவம் ஏற்கனவே கொடூரமான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இப்போது அங்கு செல்பவர்களும் அதே நிலைதான் நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்த நிலையிலும் இந்தியா நடவடிக்கையை எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. 

மியான்மருக்கு நாடு கடத்தப்பட்ட 7 பேரின் பாதுகாப்பு குறித்து அதீத கவலைக்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகள் தங்களுடைய எச்சரிக்கைக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் ஐ.நா. சபை கவலையை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News