செய்திகள்

அமைதிக்கான தூதர் நவ்ஜோத் சிங் சித்து - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புகழாரம்

Published On 2018-08-21 11:25 GMT   |   Update On 2018-08-21 11:25 GMT
தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து, இரு நாட்டு அமைதிக்கான தூதர் என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் புகழாரம் சூட்டியுள்ளார். #ImranKhan #NavjotSinghSidhu #Pakistan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் சமீபத்தில் பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி அரங்கில் அந்நாட்டு ராணுவ தளபதிவை சித்து கட்டியணைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபருக்கு அருகே சித்து அமர்ந்திருந்தார். இந்த சர்ச்சைகளுக்கு பதில் கூறிய சித்து, “நான் உட்காரும் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. விழா தொடங்க 5 நிமிடம் இருக்கும் போது முன் வரிசையில் அமருமாரு கூறினார்கள். அவர்கள் எங்கு அமர சொன்னார்களோ அங்கே அமர்ந்தேன்” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், “விழாவில் நான் கலந்து கொண்டது அரசியலுக்காக அல்ல. பழைய நண்பர் இம்ரான் கானின் அழைப்பை ஏற்று தான் சென்றேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய், லாஹூருக்கு பேருந்தில் சென்றிருக்கிறார். பிரதமர் மோடி, திடீரென பாக்., பிரதமர் இல்லத்துக்கு சென்று பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அப்போது நவாஸ் ஷரீப்பை மோடி கட்டி அணைத்தார். ஆனால் யாரும் மோடியிடம் கேள்வி எழுப்பவில்லையே ஏன்?” என்று சுட்டிக் காட்டி பேசியுள்ளார் சித்து.

பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவெத் பாஜ்வாவை கட்டி அணைத்த விவகாரத்துக்கு பதில் அளித்த அவர், “ அது ஒரு உணர்வு பூர்வமான செய்கையே” என்றார். 

“ பாகிஸ்தான் ராணுவ தளபதி, இந்தியாவின் தேரா பாபா நானக் வளாகத்திலிருந்து குருத்வார் கர்தார்பூர் சாஹிப்க்கான வழியை திறக்க முயற்சி செய்வதாக கூறினார். அதனை அடுத்து நடந்தது, உணர்வு பூர்வமானது” என்று கட்டி அணைத்ததற்கு விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், சித்துவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைதிக்கான தூதர் என பாராட்டியுள்ளார். “பாகிஸ்தான் வந்து எனது பதவியேற்பு விழாவுக்கு வந்ததற்காக நான் சித்துவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். அவர் அமைதிக்கான தூதர். அவரை குறிவைத்து தாக்கும் சிலர் துணைக்கண்டத்தில் அமைதி நிலவ விரும்பவில்லை. அமைதி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது” என இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.

இருநாடுகளும் முன்னோக்கி செல்ல, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News