தமிழ்நாடு செய்திகள்

கூகுள் மேப் உதவியுடன் கோவில்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வாலிபர்கள் கைது

Published On 2025-05-02 14:46 IST   |   Update On 2025-05-02 14:46:00 IST
  • 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • கோவில் உண்டியல்களை உடைத்து நகைகள் கொள்ளை அடித்தது தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

முசிறி:

திருச்சி மாவட்டம் துறையூர், ஜம்புநாதபுரம், தா பேட்டை, உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சுவாமிகளுக்கு அணிந்திருந்த நகை மற்றும் உண்டியல்கள் உடைத்து காசுகளை திருடும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க, திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் முசிறி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், ரவி, அறிவழகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கண்ணனூர் பாளையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சந்தேகப்படும்படி வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியை சேர்ந்த தமிழ்பாரதி(வயது 22), திருச்சியைச் சேர்ந்த சரவணன்(44) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். பின்னர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு கோவில்களில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்களில் தமிழ்பாரதி 7-ம் வகுப்பு வரையும், சரவணன் 8-ம் வகுப்பு வரையுமே படித்துள்ளனர். ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை கையாள்வதில் கில்லாடியாக திகழ்ந்த அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் பல்வேறு மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் கோவில்கள் உள்ளது என்றும், காட்டுக்கோவில்கள் எங்கெங்கு உள்ளது என்றும் கண்டறிந்து உள்ளனர்.

பின்னர் கூகுள் மேப்பில் கோவில்களில் உள்ள சுவாமி சிலைகளின் படங்களை வைத்து, சிலைகளில் நகைகள் ஏதேனும் உள்ளதா என்று பதிவிட்ட புகைப்படங்களை கண்டறிந்து கொள்ளையடித்து வந்துள்ளனர்.

இதை தொடர்ந்து தமிழ்பாரதி, சரவணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவில்களில் திருடிய சுமார் ரூ.9 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து திருடப்பட்ட நாணயங்களையும், திருட்டுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் தமிழ் பாரதி மீது அரியலூர் மாவட்ட பகுதிகளில் கோவில் உண்டியல்களை உடைத்து நகைகள் கொள்ளை அடித்தது தொடர்பாக சுமார் 40 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

7-ம் வகுப்பு படித்துவிட்டு செல்போன் அனுபவத்தால் கூகுள் மேப் மூலம் கோவில்களில் நகைகள் மற்றும் உண்டியல்களை உடைத்து திருடிய சம்பவம் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News