ராதாபுரத்தில் தச்சு தொழிலாளி கொலையில் 4 வாலிபர்கள் கைது
- ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதல் கட்ட விசாரணையில் பெண் விவகாரத்தில் தான் இந்த கொலை நடந்துள்ளது என்று தெரியவந்திருக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சங்கநேரி பகுதியை சேர்ந்தவர் பீட்டர். இவரது மகன் பிரபுதாஸ்(வயது 27). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று பிரபுதாஸ் தனது சக நண்பரான தமிழரசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோலியாங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த பகுதியில் பிரபுதாஸ் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தமிழரசன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து ராதாபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று தமிழரசனை மீட்டு நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதனிடையே நடந்தது விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து அவரை கொலை செய்த மர்ம கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று ராதாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பெண் விவகாரத்தில் பிரபுதாஸ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கூடங்குளம் பகுதியை சேர்ந்த லிங்சாமி (வயது22) என்பவரும், அவரது கூட்டாளிகளான அதேபகுதியை சேர்ந்த மகாராஜன்(23), வினோத்(42), திசையன்விளையை சேர்ந்த அருண்குமார் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து பிரபு தாசை கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு வினோத் மற்றும் அருண்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த முக்கிய கொலையாளியான லிங்கசாமி, அவரது நண்பர் மகாராஜன் ஆகியோரை இன்று காலையில் தனிப்படையினர் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
முதல் கட்ட விசாரணையில் பெண் விவகாரத்தில் தான் இந்த கொலை நடந்துள்ளது என்று தெரியவந்திருக்கிறது. எனினும் 4 பேரிடமும் முழுமையான விசாரணை மேற்கொண்ட பின்னரே இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே போலீசாரின் அலட்சியத்தால் தான் இந்த கொலை நடந்துவிட்டதாகவும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியும் பிரபுதாஸ் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது பிரபுதாஸ் கொலை செய்யப்பட்டு கிடந்த அதே இடத்தில் அவர் மீது காரை மோதவிட்டு கொலை முயற்சி நடந்தது. அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். ஆனால் அது விபத்து அல்ல. கொலை முயற்சி என்று பிரபுவின் தரப்பினர் கூறிவந்த நிலையில் தற்போது அதே இடத்தில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் அப்போதே கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று கூறினர்.