தமிழ்நாடு செய்திகள்

இணையத்தில் டிரெண்ட் ஆன கூமாபட்டியில் பூங்கா அமைக்கப்படுமா? - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

Published On 2025-07-02 07:35 IST   |   Update On 2025-07-02 07:35:00 IST
  • கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்தனர்.
  • கூமாபட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்,

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் இணையத்தில் ட்ரெண்டானது.

தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டா ஐடியில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் அருமை பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

'மன அழுத்தமா?, விடுமுறையை கொண்டாட வேண்டுமா? கூமாப்பட்டிக்கு வாங்க... கூமாப்பட்டி ஒரு தனி தீவு... இந்த ஊரின் தண்ணீர் மூலிகை தண்ணீர்... என்று அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் கூமாப்பட்டி எங்க இருக்கு என்று கூகுள் மேப்பில் தேடி அந்த ஊருக்கு படையெடுத்தனர்.

இதனிடையே கூமாப்பட்டி பிளவக்கல் அணை பகுதியில் பொதுமக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து ஏமாற வேண்டாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதனால் கூமாபட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இந்நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா அமைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், "எல்லா இடங்களிலும் பூங்கா அமைத்திட முடியாது. இது குறித்து அதிகாரியிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News