உள்ளூர் செய்திகள்

திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்

Published On 2026-02-10 10:26 IST   |   Update On 2026-02-10 10:26:00 IST
  • கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
  • பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் தி.மு.க. சார்பில் தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமரை எதிர்த்து பேசக்கூடிய ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது. எங்களை போன்றவர்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என்றால் அது திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். எல்லோருக்கும் எல்லாம் தான் திராவிட மாடல் அரசின் கொள்கை.

சாலை சரியில்லை என கேட்கிறார்கள். சாலை அமைத்து கொடுத்தால் வேகமாக வாகனத்தை ஓட்டுகிறார்கள், அதனால் விபத்து நடக்கிறது. அதில், இறந்து போய் விடுகிறார்கள். உடல் நிலைதான் முக்கியம். 2026-2031 ல் மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும், நீங்கள் மீண்டும் முதல்வராக வருவீர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சொன்னேன். செயல்படுபவர் தான் அமைச்சராக இருக்க வேண்டும்.

ஏன் என்றால் என்னுடைய துறையில் 108 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்ளனர். அவர்களை மேய்ப்பதே பெரிய சிக்கலாக உள்ளது. நிர்வாகத்தில் பல விதம் உள்ளன. வளர்ந்து வந்த இயக்கமாக தி.மு.க. உள்ளது. திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து வர வேண்டும். 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, அப்புறம் அவர்களால் வர முடிந்ததா, சொன்னால் கோபித்து கொள்வார்கள். ஏனென்றால் அவர்கள் கூட்டணியில் உள்ளார்கள்.

காங்கிரசில் ஒருவர், இருவர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள். சிறு துளி, பெருவெள்ளம் என்பது போல, வளர்ந்து வந்த கட்சிதான் தி.மு.க., கருணாநிதி 110 இடங்களில் வென்றார். அப்போது, அவர் ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? இந்த தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். இதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமென்றால் கேட்பதை செய்து கொடுப்போம். திராவிட இயக்கத்தை வெல்ல இனி ஒருவன் பிறந்துதான் வர வேண்டும்.

நேற்றுமுன்தினம் கூட நானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையும் ஒரு திருமண நிகழ்வில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது கூட்டணியில் இருக்கிறார்கள். போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம், போய் நிற்கிறோம்.

எந்த கூட்டணி என்றாலும் சரிதான். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை. தனியாக நிற்கவேண்டும் என்றாலும் ரெடி. ப.சிதம்பரம் ஜெயித்த வழக்கு என்னாச்சு என்று முதல்வர் ஒரு முறை கேட்டார். நீங்கள் தான் நிறுத்தி வைக்க சொன்னீர்கள். நிறுத்தி வைத்து விட்டேன் என்றேன். ப.சிதம்பரமும் தற்போது நண்பராகி விட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News