உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் புதர் தீ மலர்கள்

Published On 2026-02-10 10:45 IST   |   Update On 2026-02-10 10:46:00 IST
  • குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும் போது அதிக அளவில் மலரும்.
  • பல்வேறு இடங்களில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு சீசனுக்கு தகுந்தவாறு விதவிதமான பூக்கள் பூத்து குலுங்குவது வழக்கம். குறிப்பாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தொடங்கி கோடைகாலம், வசந்தகாலம், கிறிஸ்துமஸ் சீசனில் பூக்கும் சிலுவை மலர்கள் என பல்வேறு பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும்.

அந்த வகையில் தற்போது குளிர் சீசன் நிறைவு பெறுவதை உணர்த்தும் வகையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

இந்த மலர்கள் பொதுவாக குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும் போது அதிக அளவில் மலரும். குறிப்பாக கொடைக்கானலில் குளிர் காலங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அதிக அளவிலான பனிப் பொழிவினால் புதர்கள் கருகும். இதனைத் தொடர்ந்து கோடை காலம் தொடங்கும் போது கருகிய புதர்களில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயம் நிகழும். மேலும் காலம் மாறும் இந்த நேரங்களில் தீயின் நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் இந்த மலர்களுக்கு புதர் தீ (காட்டு தீ)மலர்கள் என பெயர் வந்ததாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மலைப்பகுதிகளில் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் பூத்து குலுங்கும் இந்த மலர்களைக்கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.

மேலும் தற்போது இந்தப்பூக்கள் பூக்க தொடங்கி உள்ளதால் காடுகளில் தீ பிடிக்காமல் இருக்க வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகளை முன்கூட்டியே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.

Tags:    

Similar News