தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. அரசை கண்டித்து மானாமதுரையில் 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ். அறிவிப்பு

Published On 2026-02-10 11:00 IST   |   Update On 2026-02-10 11:08:00 IST
  • மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே வரும் 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
  • எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News