நெலாக்கோட்டையில் வாகனங்கள், வீடுகளை தாக்கிய காட்டு யானை- பொதுமக்கள் சாலை மறியல்
- யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
- தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை அமைந்து உள்ளது. இது மலைஅடிவாரத்தை ஒட்டிய கிராமம் ஆகும்.
இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை இன்று அதிகாலை நெலாக்கோட்டை கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற வாகனங்களை தந்தத்தால் முட்டி சேதப்படுத்தியது. மேலும் நெலாக்கோட்டை வீடுகளின் பக்ககவாட்டு சுவர்களை இடித்து தள்ளியது.
இதற்கிடையே தெருநாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கிராம மக்கள் திடுக்கிட்டு விழித்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது தெருவில் காட்டு யானை சுற்றி திரிவது தெரிய வந்தது.
இதனை பார்த்து கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து நெலாக்கோட்டை கிராமத்தினர் திரண்டு வந்து பெரிதாக சத்தம் எழுப்பியும், தகரங்களை தட்டி ஓசை எழுப்பியும் காட்டு யானையை விரட்டினர். பின்னர் அந்த யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
நெலாக்கோட்டை கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு நின்ற வாகனங்களை தாக்கியதுடன் வீடுகளையும் சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நெலாக்கோட்டை-கூடலூர் போக்குவரத்து சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன்காரணமாக நெலாக்கோட்டை-கூடலூர் ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நெலாக்கோட்டை கிராமத்தினர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும் அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
தொடர்ந்து நாங்கள் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் அவர்கள் நெலாக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.