null
ஒரு படத்தை தடைசெய்வதால் நெருக்கடி கொடுத்துவிட முடியுமா? மோடி அவ்வாறு செய்யமாட்டார் - செல்லூர் ராஜு
- தணிக்கை விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய்யே வாய்திறக்கவில்லை.
- மாபெரும் தலைவர் மோடி.
விஜய்யின் ஜனநாயகன் பட தணிக்கை சான்றிதழ் விவகாரம், சினிமாவைத்தாண்டி அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காகத்தான் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது என பலதரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நடிகரும், தவெக தலைவருமான விஜய்யே வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம், கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ சம்மன், தற்போது தணிக்கை சான்றிதழ் இழுபறி இவையெல்லாம் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக கொடுக்கப்படும் நெருக்கடிகளா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,
"எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. அப்படி பார்த்தால் கட்சி ஆரம்பித்திருக்கிறார்; வேறு வழிகளில் நெருக்கடி கொடுக்கலாம். ஒரு படத்தை தடைசெய்வதால் நெருக்கடி கொடுத்துவிட முடியுமா? இதற்கெல்லாம் அரசியல் சாயம் பூசினால்?. மாபெரும் தலைவர் மோடி. கூட்டணிக்குள் யாரையும் வற்புறுத்தி சேர்க்கமுடியாது. மனமுவந்து வரவேண்டும். தொண்டர்கள், தலைவர்கள் விரும்பி இணைந்து வந்தால்தான் கூட்டணி. கூட்டணிக்காக இப்படி செய்வார்கள் என கொச்சைப்படுத்தக்கூடாது." என தெரிவித்துள்ளார்.