தமிழ்நாடு செய்திகள்

பணகுடி அருகே 10-ம் வகுப்பு மாணவன் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

Published On 2026-01-08 12:39 IST   |   Update On 2026-01-08 12:39:00 IST
  • இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர்.
  • மதுபோதையில் இருந்த சபரிராஜன் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன்(வயது 15). இவன் அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரத்தின வடிவேல். இவரது மகன் சபரி ராஜன்(23).

இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் உறவினர்கள் போலவே எப்போதும் சகஜமாக பழகி வந்துள்ளனர்.

இதனால் லெட்சுமணன் அடிக்கடி சபரிராஜன் வீட்டுக்கு சென்று விளையாடுவது உண்டு. கடந்த 5-ந்தேதி லெட்சுமணன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில், சபரிராஜன் அழைத்ததன் பேரில் அவரது வீட்டுக்கு லெட்சுமணன் சென்றுள்ளார்.

இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த சபரிராஜன் திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த மாணவன் லெட்சுமணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான். உடனே சபரிராஜன் அதிர்ச்சி அடைந்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

அங்கு மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை லெட்சுமணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.

ஏற்கனவே அரிவாள் வெட்டு குறித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜனை அதிரடியாக கைது செய்திருந்தனர.

இந்நிலையில், மாணவன் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News