அன்புமணி கூட்டணி பேசியது அடாவடித்தனம் - ராமதாஸ்
- கூட்டணி பற்றி பேச கட்சி நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும் என கட்சி விதி உள்ளது.
- நல்ல கட்சியெல்லாம் சேர்ந்து கூட்டணி அமைப்போம்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டணி பற்றி பேச கட்சி நிறுவனரிடம் அனுமதி பெற வேண்டும் என கட்சி விதி உள்ளது. எடப்பாடி பழனிசாமி-அன்புமணி சந்திப்பு தெருக்கூத்து. அன்புமணி ஒரு மோசடி பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கது அல்ல. கூட்டணிக்கு தலைமை தாங்கும் வலிமை தற்போது எங்களுக்கு இல்லை. தலைவர்களை அழைத்து பேசி அவர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுப்போம். இதனால் 2 நாள் வரை நீங்கள் பொறுத்திருங்கள். போக.. போக.. தெரியும்.. என நான் கூறியது போல் இன்னும் 2 நாட்களில் தெரியும்.
அன்புமணி கூட்டணி குறித்து பேச போயிருப்பார். அங்கு அவர் பொய்யை சொல்லி புழுகு மூட்டையை அவிழ்த்துவிட்டுருப்பார். அ.தி.மு.க.வினர் இக்கூட்டணியை அங்கீகாரம் செய்ததாக எனக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி என்னிடம் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை.
நல்ல கட்சியெல்லாம் சேர்ந்து கூட்டணி அமைப்போம். நான் தான் கூட்டணி குறித்து பேச முடியும். நான் இருக்கும் அணிதான் வெற்றி பெறும். பா.ம.க. கூட்டணி குறித்து அன்புமணி பேச்சு வார்த்தை நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும். கூட்டணி குறித்து அன்புமணி பேசுவது சட்ட விரோதம். பா.ம.க. என்னுடையது. நான் தான் முடிவு எடுக்க முடியும். தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கா வாக்களிக்க வேண்டும் என மக்கள் புறக்கணிப்பார்கள். அன்புமணி செய்த துரோகங்களை கணித்த பிறகு தான் அவரை கட்சியில் இருந்து நீக்கினேன். கட்சியில் இல்லாத அன்புமணி கூட்டணி என்ற நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
அன்புமணி வேண்டுமென்றால் சிவில் நீதிமன்றத்திற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். நாம் யாரோடு செல்கிறோமோ அக்கட்சிதான் ஆட்சி அமைக்கும். என் தலைமையில் கூட்டணி அமையும் என்று சொல்லமுடியாது.
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி நியாயமற்றது. பா.ம.க. வில் கூட்டணி குறித்து பேச அன்புமணிக்கு அருகதை இல்லை. மாம்பழம் சின்னம் என் கையில் தான் உள்ளது. அன்புமணி செய்தது அடாவடித்தனம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் எந்த கூட்டணியில் இணைவீர்கள் என நிருபர்கள் கேட்டபோது, தேசிய, திராவிட, தமிழக கட்சியுடன் கூட்டணி இருக்கும் என்றார்.