66 அடியை கடந்த வைகை அணை நீர்மட்டம் - முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்துள்ளது.
- சுருளி அருவியில் இன்றும் நீர் வரத்து சீராகாததால் 3-வது நாளாக தடை தொடர்கிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
பருவமழை குறைந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநில மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த வாரம் 60 அடியில் இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 66.27 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 2046 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
அணையில் 4916 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்த நிலையில் தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை குளிப்பட்டாவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டும்போது 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டியவுடன் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் வைகை ஆற்றில் திறந்து விடப்படும்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.30 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்தும் 5516 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழக பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஜூலை மாதத்தில் 137 அடி வரை ரூல் கர்வ் விதிமுறைப்படி தேக்கலாம் என்பதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அணையில் 5703 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு அணை 30.8, தேக்கடி 26.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளான மேகமலை, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு, தூவானம், அரிசிபாறை, காப்புக்காடு பகுதியில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆடி அமாவாசையன்று நீர்வரத்து சீரானதால் வனத்துறையினர் அனுமதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் அருவியில் நீராடினர். ஆனால் அன்று மதியத்துக்கு பிறகு மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதித்து பொதுமக்களை வனத்துறையினர் வெளியேற்றினர்.
இன்றும் நீர் வரத்து சீராகாததால் 3-வது நாளாக தடை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.