மதம் பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்கும் அங்குசம் "மாநில கல்வி கொள்கை" - உதயநிதி
- பாதி நேரம் குல தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த திட்டம்.
- தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னார்.
சென்னை:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில கல்விக்கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
நமக்கு கல்வி உரிமை தடுக்கப்பட்டது. அப்படி தடுக்கப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக உருவாகுன இயக்கம் தான் திராவிட இயக்கம். அப்படி போராடி பெற்ற கல்வியை எப்படியாவது பறிக்கலாம் என்று அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து சூழ்ச்சிகளை பலர் செய்துக்கொண்டே வருகிறார்கள்.
இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, குல கல்வி திட்டம், மும்மொழிக் கொள்கை, புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு என பல வழிகளில் நம்முடைய கல்வி உரிமையை சிதைக்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்த தடைகளையெல்லாம் தகர்த்து எறிந்து தான் நாம் (தமிழ்நாடு) இன்றைக்கு இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறோம். குல கல்வி திட்டம் என்று ஒன்று வந்தது. மாணவர்கள் பாதி நேரம் படிக்க வேண்டும். பாதி நேரம் குல தொழிலை கற்றுக்கொள்ளவேண்டும் என்பது தான் அந்த திட்டம். அந்த திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். அதன்பிறகு தான் அந்த குலகல்வி திட்டம் தமிழ்நாட்டில் இருந்து ஒழிந்தது.
இப்போது புதிய கல்விக்கொள்கை என்கிற பெயரில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகின்ற அந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அனுமதிக்க மாட்டோம் என இன்னொரு வாழும் பெரியாராக போர் முரசு கொட்டியவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களுடைய கல்விக்கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கு என்று நாங்கள் தனியா கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று தைரியமா, துணிச்சலா சொன்னவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதம் பிடித்து தமிழ்நாட்டின் கல்வியை அழிக்க துடிப்பவர்களை அடக்குவதற்கான அங்குசம்தான் மாநில கல்வி கொள்கை. தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சர் சொன்னார். மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2600 கோடியை தருவோம் என்று வெளிப்படையாகவே மிரட்டினார்கள். 2000 ஆயிரம் இல்ல நீங்க 10,000 கோடி தந்தாலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என தைரியமாக சொன்ன ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர். எந்த ஒரு மொழியாக இருந்தாலும் அதை கட்டாயப்படுத்தி திணிப்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் வரலாறு என்றார்.