தமிழ்நாடு செய்திகள்

விரைவில் சந்திப்போம்... பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து

Published On 2025-05-08 10:50 IST   |   Update On 2025-05-08 10:50:00 IST
  • 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சென்னை :

பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவர்கள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள், வெற்றி காணுங்கள்.

வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்.

விரைவில் சந்திப்போம்.

வெற்றி நிச்சயம்!

இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சந்தித்து பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

Similar News