தமிழ்நாடு செய்திகள்

ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை

Published On 2025-08-25 13:33 IST   |   Update On 2025-08-25 13:33:00 IST
  • ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
  • ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா எனவும் பரிசோதித்தனர். இதனை தொடர்ந்து ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆம்புலன்ஸை அழைத்தது யார் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் வாகனத்தைத் தாக்கினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்லும்போது சைரன் சப்தத்துடனே செல்லும்; அதனால் வெறும் ஆம்புலன்ஸ் செல்கின்றது என்று நினைக்க வேண்டாம்.

அழைப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட்டு முறையான விசாரணைக்குப் பிறகே ஆம்புலன்ஸ் நோயாளிகளை அழைக்கச் செல்கின்றது.

108 ஆம்புலன்ஸ் மற்றும் பணியாளர்களை தாக்கினால் வன்முறை தடுப்பு மற்றும் உடைமைகள் சேதார தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தாக்கும் நபர்கள் மீது மருத்துவ பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தாக்கினால் எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்த பதாகைகளை 108 ஆம்புலன்ஸ் கதவுகளில் வலது புறத்தில் ஒட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News