தமிழ்நாடு செய்திகள்

கோவை முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.43,844 கோடி முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Published On 2025-11-25 18:33 IST   |   Update On 2025-11-25 18:33:00 IST
  • கோவையில் இன்று 3வது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.
  • இதில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

கோவை:

தமிழக பொருளாதாரத்தில் கோவை மாவட்டம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது.

தொழில் நகரான கோவை தற்போது கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ்பெற்று விளங்குகிறது.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இதுதவிர தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திற்கு மேலும் பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2021 நவம்பர் 23-ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டில் ரூ.34,723 கோடி முதலீட்டில் 74 ஆயிரத்து 835 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இன்று கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழ்நாடு தொழில்துறை சார்பில் மாலை 5 மணிக்கு தமிழ்நாடு வளர்கிறது (டி.என்.ரைசிங்) எனும் 3-வது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.43 ஆயிரத்து 844 கோடி முதலீட்டில் புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதன்மூலம் 1 லட்சத்து 709 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் கோவை மண்டலம் தொழில்துறையில் சிறந்து விளங்கும் என்றும், தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News