தி.மு.க.வுக்கும்- த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி: விஜய் கருத்துக்கு இ.பி.எஸ் பதில்
- நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார்.
அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர்.
பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார்.
2026 தேர்தலில் திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது" என்றார்.