'கட்சியின் பெயரையே நிராகரிக்கும் இடத்தில் அதிமுகவின் கூட்டணி உள்ளது' - கனிமொழி!
- ஆண்டுமுழுவதும் ஆளுநர்களுக்கு ரூ.700 கோடி செலவுசெய்து கொண்டிருக்கிறோம்.
- தமிழ்நாடு ஆளுநருக்கு குடியரசு என்றால் என்னவென்றே தெரியாது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
இதில் பேசிய கனிமொழி,
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் மட்டுமே பெண்களுக்கான ஆட்சியை நடத்தமுடியும் என உங்களுக்கு நன்றாக தெரியும். யார் வேண்டுமானாலும் சொல்லலாம், நான் பத்தாயிரம் கொடுக்கிறேன், 2 ஆயிரம் கொடுக்கிறேன், குலவிளக்கு திட்டம் என எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எதை சொன்னாலும் எதுவும் வராது என அனைவருக்கும் தெரியும். ஆனால் மகளிர் உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வரும்.
தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் டபுள் எஞ்சின், டபுள் எஞ்சின் எனக் கூறுகிறார்கள். எனக்கு தெரிந்த அந்த எஞ்சின் வேலைசெய்யாத என்ஜினாகத்தான் உள்ளது.தேராத, பழுதடைந்த என்ஜினாகத்தான் இருக்கிறது. குஜராத்தில் மொத்த அரசு மருத்துவக்கல்லூரிகள் ஆறுதான். ஆனால் தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன.
அதற்கான படுக்கை வசதிகள் கிட்டதட்ட 1 லட்சத்தை தொட்டுக்கொண்டு இருக்கின்றன. அதுபோல் தமிழ்நாட்டில்தான் தொழில்வளர்ச்சி அதிகம். கிட்டத்தட்ட 38 ஆயிரம் தொழிற்சாலைகள் மேல் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. அதில் 42% பெண்கள் பணிபுரிகின்றனர்.
மின்னணு ஏற்றுமதியில் முதல் இடம். ஜவுளி ஏற்றுமதியில் முதலிடம். வேறு எந்த டபுள் எஞ்சினும் இதில் இல்லை. பெண்களுக்கான குற்றங்களும் அங்குதான் அதிகம். சமூக முன்னேற்றக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம். பெரிய மாநிலங்களில் முதலிடம் தமிழ்நாடுதான்.
இன்று ஒரு டாலருக்கு 92 ரூபாய் நாம் கொடுக்கவேண்டும். யார் எந்த கனவில் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதற்கான பாடத்தை தமிழ்ப் பெண்கள் கூறுவார்கள். தமிழ்நாடு ஆளுநருக்கு குடியரசு என்றால் என்னவென்றே தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையில் தமிழ்நாடு உரையை வாசிக்காததற்கு ஏதேனும் ஒரு காரணம். வரவில்லை என்று முன்னரேக் கூறலாம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுத்த அரசை அவமதிக்க வேண்டும் என்று செய்யும் நிலையை பார்க்கிறோம்.
ஆளுநர் உரை வேண்டாம் என அரசியலமைப்பை மாற்றவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் என்னை பொறுத்தவரை ஆளுநரே வேண்டாம். அவர்களால் எந்தப் பலனும் இல்லை. இதனைத்தான் திமுகதான் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறது. ஆண்டுமுழுவதும் ஆளுநர்களுக்கு ரூ.700 கோடி செலவுசெய்து கொண்டிருக்கிறோம். இதனை எத்தனை பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு பயன்படுத்தலாம்.
தேர்தல் நேரத்திற்கான சுற்றுலா பிரதமர்தான் மோடி. சமீபத்தில் தமிழ்நாட்டில் பேசிய பிரதமர் அனைத்துக் கட்சிகளின் பேரையும் கூறினார். ஆனால் அதிமுகவின் பெயரை குறிப்பிடவில்லை. திமுகவிற்கு என்ன கவலை என்றால், கடைசிவரை அதிமுக சொல்லாத பெயராகவே போய்விடப் போகிறது. ஜாக்கிரதையாக இருங்கள். கட்சியின் பெயரையே நிராகரிக்கும் இடத்தில் அதிமுகவின் கூட்டணி உள்ளது.
தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஆளாக்கிய கட்சிக்கு துரோகம் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்." என தெரிவித்தார்.