தமிழ்நாடு செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்- ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழக பயணிகள் 68 பேர் பத்திரமாக மீட்பு

Published On 2025-04-23 14:44 IST   |   Update On 2025-04-23 14:44:00 IST
  • ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை 5 நாட்கள் சுற்றுலா பயணமாக சென்றிருந்தனர்.
  • பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து 25 பெண்கள் உட்பட 68 பேர் மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை 5 நாட்கள் சுற்றுலா பயணமாக சென்றிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதுரை திரும்ப உள்ளனர்.

இதுகுறித்து மதுரையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்க துணைதலைவர் சித்தார்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரையை சேர்ந்த 30 பேர் சென்றுள்ள நிலையில் 68 பேரும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் இன்றைய தினம் ஏற்கனவே திட்ட மிட்டபடி அவர்கள் சுற்றுலா தளத்தில் இருப்பதாகவும் வீடியோ கால் மூலமாக தகவல் அளித்துள்ளனர்.

அந்த 68 பேரும் பெஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே மற்றொரு இடத்தில் இருந்ததாக தெரிவித்தனர்.

மேலும், அந்த 68 பேரில் ஒருவருக்கு இருதய நோய் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாக்குதல் நடந்தது குறித்து சுற்றுலா சென்ற அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில் நாங்கள் தான் இங்கிருந்து அவர்களுக்கு தகவல் அளித்தோம்.

68 பேரும் இன்று இரவு மற்றும் நாளை காலை விமானம் மூலமாக தமிழகத்திற்கு திரும்பவுள்ளனர்.

தற்போது அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். அங்கு கடையடைப்பு போராட்டம் நடந்தாலும் இயல்பான நிலை உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News