தமிழ்நாடு செய்திகள்

ஆளுநர் ஆர்.என்.ரவி கோரிக்கையை ஏற்று ராஜ்பவன் பெயரை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்

Published On 2025-11-30 11:13 IST   |   Update On 2025-11-30 14:30:00 IST
  • ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது.
  • நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல்.

சென்னை:

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ்கள் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் 'லோக் பவன்' என்பது தமிழில் 'மக்கள் பவன்' என்று பொருள்படும். இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர் பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி 'ராஜ்பவன்' என்பதை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதை அனைவரும் வரவேற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது.

நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல். அவரது கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News