டிட்வா புயல் - மாமல்லபுரம் கடற்கரையில் தவித்த 120 இருளர் குடும்பத்தினர் மண்டபத்தில் தங்கவைப்பு
- இருளர் குடும்பத்தினர் கோவளம் சாலையில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர்.
மாமல்லபுரம்:
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள "டிட்வா" புயலின் தாக்கத்தால் நேற்று மாலை மாமல்லபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் காற்றுடன் மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மீனவர்கள் தங்களது படகுகள், மிஷின், வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.
கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தென்பகுதி, பட்டிப்புலம் பகுதிகளில் கடற்கரை கரையோரம் குடில் அமைத்து தங்கியிருந்த இருளர் 120 குடும்பங்கள் பாதுகாப்பு இன்றி இருப்பதாக தகவலறிந்த, மாவட்ட கலெக்டர் சினேகா அவர்களை பாதுகாக்க உத்தரவிட்டார்.
சப்-கலெக்டர் மாலதி ஹலென் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் சரவணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து, அப்புறப்படுத்தி கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு மாமல்லபுரம் நகராட்சி ஆணையர், தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்டோர் உணவுகள் வழங்கினர்.
மாமல்லபுரத்தில் ஞாயிறு, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும். டிட்வா புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர். கடற்கரை சாலையோர கடைகள் மற்றும் அரசு கைவினை பொருட்கள் கடை இருக்கும் ஐந்துரதம் வளாகங்களில் உள்ள கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.