தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்ட மசோதா சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது

Published On 2026-01-24 14:49 IST   |   Update On 2026-01-24 14:49:00 IST
  • ஆளுநர் உரையாற்ற வந்தபோது மைக்கை யாரும் ஆப் செய்யவில்லை.
  • ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு.

சென்னை:

கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும், பதிவாளருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் சட்டமசோதா கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் திருப்பி அனுப்பினார். இந்த மசோதா இன்று சட்டசபையில் மறு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை ஆளுநருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து பேசினார்.

இதை தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, வி.சி.க. எம்.எல்.ஏ. பாலாஜி, மார்க்சிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. நாகை மாலி, ம.தி.மு.க. சதன் திருமலைக் குமார், ம.ம.க. ஜவாஹிருல்லா ஆகியோர் பேசினார்கள்.

அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் உரையாற்ற வந்தபோது மைக்கை யாரும் ஆப் செய்யவில்லை. பேரவைத் தலைவர் பேசத் தொடங்கியதும் மற்ற மைக்குகள் தானாக ஆப் ஆகி விடும் வகையில் உள்ளது.

எனவே யாரும் ஆளுநர் மைக்கை ஆப் செய்யவில்லை. அவர் உரையை வாசித்து இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆளுநர் உரையை வாசிக்காமல் பேச முயன்ற காரணத்தால் பேரவைத் தலைவராக பேசினேன். அப்போது அனைத்து மைக்குகளும் ஆப் ஆகிவிடும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நாம் எவ்வளவு கண்ணியமாக, நாகரிகமாக நடந்து கொண்டாலும் ஆளுநர் மாறுவதாக இல்லை. சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை கண்டிக்கிறேன் என்று தெரிவித்தார்.

இறுதியாக பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. (ஓ.பி.எஸ்.ஆதரவாளர்) ஐயப்பன் பேசுகையில், ஆளும் கட்சி தயார் செய்து அளிக்கும் அறிக்கையை ஆளுநர் வாசிப்பது தான் மரபு. ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றது கண்டத்திற்குரியது. எனவே ஆளுநரை திரும்பபெற வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் சட்ட மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News