தமிழ்நாடு செய்திகள்

குடியாத்தம் நகராட்சியை கண்டித்து 27-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Published On 2026-01-24 14:33 IST   |   Update On 2026-01-24 14:33:00 IST
  • தி.மு.க. அரசை கண்டித்தும், புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம்.
  • குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடியாத்தம் நகரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைக்காமல் காலம் தாழ்த்தியும், நகராட்சி வாழ் மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் தி.மு.க. அரசு மற்றும் குடியாத்தம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலன் கருதி புதிய அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாகத் திறந்திட வலியுறுத்தியும் வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற 27-ந்தேதி குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரமணி தலைமையிலும், வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த. வேலழகன், குடியாத்தம் நகர செயலாளர் பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

Tags:    

Similar News