தமிழ்நாடு செய்திகள்

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்- ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

Published On 2026-01-24 14:22 IST   |   Update On 2026-01-24 14:22:00 IST
  • இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர்.
  • வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

சென்னை:

தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் என்.சுரேஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.

பின்னர் இந்த திட்டத்தை மாநில முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்கு மார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது.

3 மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதே போல் கியூ ஆர் கோடுமுறை அமல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.1000 கோடி என சாதனை படைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் என்ன பிரச்சனை? இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர், வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News