தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயல்: சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டில் விபத்து நிவாரண ரெயில்கள் தயார் - தெற்கு ரெயில்வே

Published On 2025-11-30 13:39 IST   |   Update On 2025-11-30 13:39:00 IST
  • வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.
  • சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் தயார் நிலையில் உள்ளன.

சென்னை:

'டிட்வா' புயலைக் கருத்தில் கொண்டு, பயணி கள் மற்றும் ரெயில்வே கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் விரிவான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. இதற்காகக் கோட்ட அவசரகாலக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, பெரம்பூர், ஆவடி, தாம்பரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் சூலூர்பேட்டை உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள், பாலங்கள், மதகுகள் மற்றும் தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர்.

வடிகால்கள் தூர்வாரப்பட்டு, மழைநீர் எளிதாக வடிவதற்குத் தற்காலிக கால்வாய்கள் வெட்டப்பட்டு உள்ளன.

அனைத்து அதிகாரிகளும் தங்களது தலைமையகத்தில் இருக்கவும், குறுகிய அறிவிப்பில் பணிக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எந்தவொரு அவசர நிலையையும் சமாளிக்க, சென்னை சென்ட்ரல், செங்கல்பட்டு மற்றும் ஜோலார்பேட்டையில் விபத்து நிவாரண ரெயில்கள் மற்றும் சென்னை சென்ட்ரலில் தானே இயங்கும் விபத்து நிவாரண ரெயில் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

மின் இணைப்புகளைச் சரிசெய்யப் பணியாளர்களுடன் கூடிய 'டவர் வேகன்கள்' மற்றும் அவசரத் தேவைக்காக டீசல் என்ஜின்கள் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. குறைந்தது 72 மணி நேரத்திற்குத் தேவையான டீசல் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிர் சேதத்தைத் தடுப்பதே எங்களின் முதல் முன்னுரிமை என்று, சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கருதி தேவைப்பட்டால் சில பகுதிகளில் ரெயில் சேவைகள் நிறுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News