தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் த.வெ.க. மாநாடு தேதி மாற்றமா?

Published On 2025-07-30 08:06 IST   |   Update On 2025-07-30 08:09:00 IST
  • மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர்.
  • 530 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது.

மதுரை:

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது.

2-வது மாநாட்டை மதுரையில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் மாநாட்டுக்கான பூமி பூஜை கடந்த 16-ந்தேதி நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் சேர்ந்து முகூர்த்தகால் நட்டனர்.

இதனை தொடர்ந்து, மாநாட்டிற்கு அனுமதி கோரி மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர்.

இந்தநிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று மதுரை வந்தார். அவர், பாரபத்திக்கு சென்று பணிகளை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்தார். மாநாட்டுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வலியுறுத்தினார்.

அப்போது, 530 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதில் 300 ஏக்கரில் மாநாடு நடைபெறும். மீதமுள்ள இடம் கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. 1½ லட்சத்திற்கும்மேல் தொண்டர்கள் வருவார்கள் என தெரிவித்ததாக தெரிகிறது.

அப்போது போலீஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் தேதி ஆகஸ்டு 25 என முடிவு செய்து இருக்கிறீர்கள். ஆனால், 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி வர இருக்கிறது. அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டி இருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

அதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், நிர்ணயித்த தேதியில் மாநாடு நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கிறோம் எனக்கூறியுள்ளனர்.

இதனால் குறிப்பிட்ட தேதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

Tags:    

Similar News