கோவை மருதமலை அடிவாரத்தில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை குட்டி உயிரிழப்பு
- மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் நேற்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்தது.
- கல்குகையில் இருந்த கருஞ்சிறுத்தை குட்டி மாயமாகி இருந்தது.
வடவள்ளி:
கோவை மாவட்டம் மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் யானை, காட்டெருமை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனியில் நேற்று அதிகாலை கருஞ்சிறுத்தை ஒன்று குட்டியுடன் வந்தது.
பின்னர் கருஞ்சிறுத்தை அங்குள்ள யாரும் வசிக்காத ஒரு வீட்டிற்குள் நுழைந்தது. அங்கு தனது குட்டியை விட்டு விட்டு தாய் சிறுத்தை அங்கிருந்து சென்று விட்டது.
குட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது கருஞ்சிறுத்தை குட்டி இருந்தது.
அதிர்ச்சியான அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு கூண்டுடன் விரைந்து வந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் இருந்த கருஞ்சிறுத்தை குட்டியை மீட்டு கூண்டுக்குள் அடைத்தனர்.
பிடிபட்ட கருஞ்சிறுத்தை குட்டியை எடுத்து கொண்டு மருதமலை அடிவாரத்தையொட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுத்தை குட்டியை அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதற்காக அங்கு ஒரு கல்குகையின் அருகே சிறுத்தை குட்டியை விட்டனர்.
5 மணிக்கு அங்கு சிறுத்தைகள் வந்தது. ஆனால் கருஞ்சிறுத்தை குட்டி அவற்றுடன் செல்லவில்லை. தொடர்ந்து வனத்துறையினர் அதனை கண்காணித்தனர்.
மாலை 5.15 மணிக்கு மீண்டும் வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கல்குகையில் இருந்த கருஞ்சிறுத்தை குட்டி மாயமாகி இருந்தது.
இதையடுத்து வனத்துறையினர் வனத்திற்குள் சென்று பார்த்தனர். அப்போது கல்குகை இருந்த இடத்தில் இருந்து 300 அடி தூரத்தில் கருஞ்சிறுத்தை குட்டி இறந்து கிடந்தது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து கருஞ்சிறுத்தை குட்டியை பார்த்தனர். தொடர்ந்து சிறுத்தை குட்டி எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.