ஒரு மாதத்திற்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
- இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு ஆண்டின் அனைத்து மாதத்திலும் தண்ணீர் விழும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.
இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வந்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் அங்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் புறநகர் பகுதிகளில் மலை ஓய்ந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்ததால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து குறையாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியிலும் மழை குறைந்து விட்டதன் காரணமாக இன்று அருவியில் நீர்வரத்து குறைந்து குளிப்பதற்கு ஏற்ற சூழல் உருவானது.
இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரம் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.