கடலூர் விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில்,
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எழுத்தூர் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சாலைத் தடுப்பை உடைத்து கொண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 மகிழுந்துகள் மீது மோதியதில் மகிழுந்துகளில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது தான் விபத்துக்கு காரணம் ஆகும். அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளின் டயர்கள் வெடிக்கும் நிலையில் உள்ளன என்றால் எந்த அளவுக்கு மோசமான நிலையில் அரசுப் பேருந்துகள் பராமரிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசு தான் இந்த விபத்துக்கும், உயிரிழப்புகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.