அ.தி.மு.க.வின் முக்கிய புள்ளிகள் விரைவில் த.வெ.க.வில் இணைவார்கள்- செங்கோட்டையன்
- தமிழ்நாட்டில் ஆளும் இரு கட்சிகள் மட்டுமே ஆள வேண்டுமா? புதிய கட்சி ஆளக்கூடாதா?
- கூட்டணியை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.
கோபி:
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி இன்று ஈரோடு மாவட்டம் கோபி, கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்று த.வெ.க.கொள்கை தலைவர்களில் ஒருவராக உள்ள வேலு நாச்சியாருக்கு அவரது நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது.
வெள்ளையனை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் வேலுநாச்சியார். இது ஒரு வரலாறு. எதிர்கால தமிழகத்தின் நாயகன் விஜய் 2026-ல் முதலமைச்சர் நாற்காலில் அமர போகிறார்.
தமிழ்நாட்டில் ஆளும் இரு கட்சிகள் மட்டுமே ஆள வேண்டுமா? புதிய கட்சி ஆளக்கூடாதா?
தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்ப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
ஒ.பி.எஸ் பொறுத்தவரையிலும் அவர் உடன் உள்ள மாவட்ட செயலாளர் த.வெ.க.வுடன் செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். அதனை பொறுத்தவரையில் அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் 2 லட்சம் பேர் முன்னிலையில் தலைவர் விஜய் கருத்துகளை தெளிவாக சொல்லி இருக்கிறார்.
கூட்டணியை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். கருத்துக்கள் கூறலாம். தலைமை தான் முடிவு செய்யும்.
பொறுத்திருந்து பாருங்கள்... அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய புள்ளிகள் மிக விரைவில் வந்து த.வெ.க.வில் இணைவார்கள். அதை நீங்கள் பார்க்க தான் போகின்றீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தவுடன் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக பல்வேறு கட்சிகளில் இருக்கும் அதிருப்தி தலைவர்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க.வில் இருக்கும் அதிருப்தி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் பண்டிகைக்கு பிறகு பெரிய அளவில் இணைப்பு விழா நடத்தி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை த.வெ.க.வில் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.