தமிழ்நாடு செய்திகள்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷா 9-ந்தேதி தமிழகம் வருகை

Published On 2025-12-25 13:02 IST   |   Update On 2025-12-25 13:02:00 IST
  • கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர்.
  • கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

சென்னை:

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகளை உறுதிப்படுத்தும் வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஏற்கனவே 2021 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. 2024 பாராளுமன்ற தேர்தலில் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலை பலமான கூட்டணியுடன் சந்திக்கும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பே அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியை அமித்ஷா உருவாக்கினார்.

முன்கூட்டியே உருவான இந்த கூட்டணி அரசியலில் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவதில் டெல்லி பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது மற்ற கட்சிகளை சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

கூட்டணி மட்டுமின்றி தொகுதி பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் விரிவாக ஆலோசித்து உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ.க. 35 தொகுதிகள் வரை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமியிடம் தங்கள் கட்சியின் விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்று மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி குழுப்பிய போது அவர் உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால் தனது தலைமையிலான இந்த காலகட்டத்தில் பா.ஜ.க. அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.

முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அ.ம.மு.க., ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தற்போது அந்த கூட்டணியில் இல்லை. அதேபோல் தே.மு.தி.க.வும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. எனவே கூட்டணியை வலுப்படுத்துவது மற்றும் உறுதிப்படுத்துவதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவுகின்றன.

இதற்கிடையில் கூட்டணியை உறுதிப்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது.

பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசார பயணத்தை தொடங்கினார். இந்த பிரசார பயணத்தை பல்வேறு மாவட்டங்களில் மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் அடுத்த மாதம் (ஜனவரி) 9-ந்தேதி புதுக்கோட்டையில் நிறைவு செய்கிறார். இந்த இரு விழாக்களையும் ஒரு சேர நடத்தவும் இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகிய இருவரையும் அழைக்கவும் முடிவு செய்து இருந்தார்கள்.

ஆனால் பிரதமர் மோடியின் வருகை உறுதியாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு 9-ந்தேதி அமித்ஷா வருகை உறுதியாகி இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்போதைக்கு கூட்டணி கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் சில கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்பது உறுதியாகி இருப்பதாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடப்பதால் எந்தெந்த கட்சிகள் வரும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரியவரும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News