விளையாட்டு வினையானது - அதிக அளவு சத்து மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
- சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
- நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
அதே பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் மகன் நந்த பெருமாள் (12), கீழ பத்தையை சேர்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றி மதன் (12). இவர்கள் 4 பேரும் கீழ பத்தையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு மருத்துவக்குழுவினர் சென்று மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்தனர். அப்போது சத்து குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுபோல சந்துரு, நந்த பெருமாள், நரேஷ், வெற்றி மதன் ஆகியோருக்கும் மருத்துவ குழுவினர் சத்து மாத்திரைகள் வழங்கினர்.
இந்நிலையில் மாலை இடைவேளையின்போது 4 பேரும் விளையாட்டுக்காக யார் சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிடுவது என்று போட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும், வெற்றி மதன் 4 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் 4 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்ட நிலையில், வீட்டிற்கு சென்றதும் 4 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் வயிற்று வலியும் ஏற்பட்டது.
இதனால் பதறிய பெற்றோர்கள் 4 பேரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சந்துரு, நந்த பெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து களக்காடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாக அதிக அளவில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.