தமிழ்நாடு செய்திகள்

திமுக மூத்த நிர்வாகி சக்திவேலிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-07-14 07:15 IST   |   Update On 2025-07-14 07:15:00 IST
  • இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
  • சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்!

தூத்துக்குடி மாவட்டம், முன்னாள் ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் சக்திவேல் அவர்களை திமுக உறுப்பினர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், "தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!

எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்! உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது!

சக்திவேல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, சக்திவேல் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அதன் உறுதிமிக்க தொண்டர்களால் உருவானது. அவர்களே கழகத்தின் முகவரி. தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டத்தில் பல ஆண்டுகளாக மக்கள் சேவை புரிந்து, கழகத்தின் அடையாளமாய் திகழும் திரு. சக்திவேல் அவர்களின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தேன்.

கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களும் தொலைபேசி வழியாக அவரிடம் பேசி ஊக்கமளித்ததோடு, கழகம் என்றும் துணைநிற்கும் என உறுதியளித்தார்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News