விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்
- எந்தப் படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார்.
- அ.தி.மு.க. எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர் என தெரிவித்தார்.
ஈரோடு:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க. தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, த.வெ.க.வில் இணைந்த பின் சொந்த ஊரான கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கோபிச்செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் த.வெ.க.வினர் மத்தியில் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:
தமிழ்நாட்டை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய். விஜய் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
எந்தப் படம் சட்டையில் வைத்திருந்தாலும் என் தலைவர் ரசிப்பார். எல்லோரையும் அரவணைப்பவர் விஜய்.
நான் பார்த்த முதல் தலைவர் எம்.ஜி.ஆர், 2-வது தலைவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளே தமிழகத்தை ஆள வேண்டுமா? அல்லது புதிய தலைமுறையினர் ஆள வேண்டுமா?
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாக இருந்ததைபோல் விஜய்க்கும் வழிகாட்டியாக இருப்பேன்.
காலங்கள் கனிந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் நம்முடைய கூட்டணி வலிமையாக மாறும். நம்மோடு இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள்.
அ.தி.மு.க. எங்குள்ளது என்ற நிலைக்கு ஆளாக்கிவிட்டனர். எடப்பாடி பழனிசாமி ஒரு தேர்தல் வெற்றியாவது பெற்றிருக்கிறாரா? என்றார்.